மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்

பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!
உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பாவங்கள் செய்தல் கூடாது என்று ஆழமாக வலியுறுத்துகிறது பெளத்தம். அந்த வகையில் மனத்தினால் செய்யப்படும் பாவங்களை அடுக்கும் பெளத்தம், எவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது. 

மனத்தினால் செய்யப்படும் பாவங்களாவன : 

* அபித்யா : பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும்.

* வியாபன்ன சித்தம் : பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல்.

* மித்யா திருஷ்டி : எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, 'பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை'; 'இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லை' என்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல்.

இந்த மூன்று வகையான மனத்தினால் செய்யப்படும் பாவங்களையும் செய்திராமல், மேற்கூறினவற்றுக்கு நேரெதிராகச் செயல்படுவதே தர்மாசரணம் என்கிறது பெளத்தம்!

ஐம்புலன்களில் ஒன்றான வாய் மூலம் செய்யப்படும் பாவங்களையும், அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக வலியுறுத்துகிறது, பெளத்தம்.

வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன:

பொய் பேசுதல் : தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல்... இவ்வாறு சுய லாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.

கோள் சொல்லல் : பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதலும் பாவமே.

கடுமையாக பேசுதல் : பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல்.

வீண்பேச்சு : பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயம் அற்ற பேச்சு.

மேற்குறிப்பிட்ட வாயினால் செய்யப்படும் நான்கு பாவங்களையும் செய்தல் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்துகிறது 'பெளத்தம்'.

பாவங்கள் என்பது என்னென்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு, அதைச் செய்யாமல் இருக்க நம்மில் பலரும் முனைகிறோம்.

அத்தகையோருக்கு தருமத்தை போதிக்கும் பெளத்தம், முதலில் மனிதனால் செய்யப்படும் பாவங்களைப் பகுத்து கூறுகிறது.

இவ்வகையான பாவங்களை புரியாமல் இருப்பதும் தருமமே என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.

மனிதன் தனது உடலால் செய்யும் பாவங்களை மூன்றாக பிரித்து, அதனைத் தெளிவாக விளக்குகிறது பெளத்தம்.

உடலால் செய்யப்படும் பாவங்களாவன:

1. பிராணாதிபாதம்

ஹிம்சை புரிதல், தன் கரங்களில் இரத்தக்கறை படும்படியான வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிராணிகளிடம் அன்பாக இருக்காமல், வதை செய்தல்.

2. அதின்ன தானம்

திருட்டுக் காரியங்களைச் செய்தல், பிறருக்குச் சொந்தமான உடமைகளை, அந்நபருக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவையான கள்ளத்தனங்கள்.

3. காமத்தில் தவறு செய்தல்

பிறன் மனை நோக்குதலையே காமத்தில் செய்யும் தவறு என்க்றது பெளத்தம்.