அவ்வளவு சக்தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.
அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்கின்றனர்.
ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால்
மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.
அருணாசலத்தை வலம் வருகிறேன்" என்று சொன்னாலே பாவம் தீரும். "வலம் வர வேண்டும்" என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.
கிரிவலம் பற்றி அருணாசல
புராணம்
அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.
வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும். அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும். மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம்.
அருணாச்சல சிவம்! அருணாச்சல சிவம்! அருணாச்சல சிவம்!
அருணை சிவம்!!!