வெண்ணெய் திருடி

கண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்.