கண் திருஷ்டி

கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?
'திருஷ்டி' எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது.

இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம். ஸத்வ குணம் உடையதாகவும், கிருமிநாசினியாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் உடையது.

மஞ்சள், பெண்மையின் மங்களத்தின் சின்னம். நமக்குத் தீமைகள் விலக்கப்பெற்று தூய்மை அடையவும், அதுமட்டுமில்லாமல் அனைத்துவிதமான மங்களங்கள் உண்டாகவும், சுண்ணாம்பும் மஞ்சளும் கலக்கப்பட்டு சிகப்பு நிறம் ஏற்பட்டு, இதனால் உக்ரமான பார்வையால் பார்க்கப்பட்ட நோக்கு மாறிவிடும். சிகப்பு நிறம் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளையும் விலக்கக்கூடிய சக்தி படைத்தது.