வாழ்க்கை

கடைசிவரை யாரோ… ?

“”பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும்போதும் அழுகின்றான்” என்று ஒரு கவிஞர் சொல்லியது போல மனிதன் தாயின் மடியில் மலர் போன்ற குழந்தையாக மலரும் போதும் அழுகின்றான். அவனே வளர்ந்து பெரியவனாகி வாழ்ந்து முடித்து வாழ்வின் இறுதியில் மண்ணில் மலராக உதிரும் போதும் அழுகின்றான். ஒவ்வொருவரின் வாழ்விலும் இது நியதியாகும். காலத்தின் மாற்றத்தில் இன்று பெற்றவர்களை கூட கவனிப்பதற்கு பிள்ளைகள் தயாராக இல்லை.

வேகமாக ஓடும் வாழ்க்கையின் ஓட்டத்திற்கு தகுந்தவாறு மனிதனும் ஓடிக் கொண்டு இருக்கிறான். இந்த ஓட்டத்தில் அவன் பெற்றோர்களை கவனிக்க முடியவில்லை. அதனால் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகிறான். இன்னும் சிலர் பிள்ளைகள், உறவினர்கள் ஆதரவு இல்லாமல் தவிப்பவர்கள் விட்டை விட்டு வெளியறி தங்களின் வாழ்வை தெருவோரங்கள், பிளாட்பாரங்கள், ரயில்வே ஸ்டேஷன்களில் கழித்து வருகின்றனர். வயிற்றுக்காக ஏதோ கிடைப்பதை உண்டு வாழ்ந்துவரும் இவர்கள் சொந்தங்கள், பந்தங்கள் இருந்தாலும் அனாதைகளாகவே தங்களின் வாழ்க்கை வண்டியை ஓட்டி வருகின்றனர். எல்லோரும் இருந்தும் இல்லாமல் வாழ்ந்துவரும் இவர்களைப் போன்றவர்கள் இறந்தாலும் அதனைக் கண்டு கவலைப்படுவதற்கோ, கண்ணீர் விடுவதற்கோ இன்றும் யாரும் இல்லை என்று சொல்லிவிடலாம். இப்படி இறந்து கிடப்பவர்களை கண்டு ஆறறிவு படைத்த மனிதர்கள் “”அய்யோ பாவம்” என்று பரிதாபம் கொள்வதற்கு கூட நேரமில்லாமல் “”யார் எப்படிப்போனால் நமக்கென்ன, நம்ம கதை நடக்கிறதா” போதும் என்ற போக்கிலே வாழ்ந்தும் வருகின்றனர்.

பணம் தான் வாழ்க்கை என்று பலரும் நினைத்து, சொந்த பந்தங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணத்தால் உண்மையான பாசத்தையோ, அன்பையோ யாராலும் இப்போதும், எப்போதும் வாங்க முடியாது என்பது உண்மையாகும்.

சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
ரிக்ஷா தொழிலாளி ஒருவர் தனது ரிக்ஷாவில் ஒரு பிணத்தை வைத்துக் கொண்டு ரோட்டில் ஓட்டிச் சென்றார். பயணிகள் பயணிக்க வேண்டிய ரிக்ஷாவில் பிணம் இறுதிப்பயணம் செய்வது என்ன கொடுமை. இறந்தவருக்கு பிள்ளைகள் எல்லோரும் இருக்கின்றனர். பிள்ளைகள் கவனிக்காமல் விட்டதால் கடைசியில் நோய் வந்து இறந்து விட்டார். அனாதை பிணமாக அரசாங்க மருத்துவமனையிலே சில நாட்க்களாக இருந்தது. பிள்ளைகளோ, உறவினர்களோ, யாரும் வந்து பார்க்கவில்லை. இறந்து பல நாட்கள் ஆகி விட்டதால் யாரோ ஒருவர் இந்த ரிக்ஷா தொழிலாளிடம் பேசி இந்த உடலை மையவாடியில் சேர்த்து விடச் சொல்லி கையில் பணத்தையும் கொடுத்துள்ளார். கடைசியில் அனாதை பிணமாகவே அடக்கம் செய்துவிட்டார்கள்.

இறந்து போன பெரியவரை பராமரிக்காமல் விட்டது அவரது பிள்ளைகளின் குற்றமா அல்லது கல் நெஞ்த்தவர் கண்ணிலும் கண்ணீரை வரவழவைக்கும் வகையில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு வழிவகுத்தவர்களால் மனிதநேயம் செத்துவிட்டதோ என்பதுதான் குற்றமா என்பதற்கெல்லாம் அந்த இறைவன் தான் பதில் சொல்லவேண்டும். எது எப்படியோ “”வீடு வரை மனைவி, வீதி வரை உறவு, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” என்ற பாடல் வரிகளில் பிணமாக சென்ற முதியவரின் வாழ்வில் கடைசி வரை யாருமே இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பயணிகளான மக்கள் பயணிக்க வேண்டிய சைக்கிள் ரிக்ஷாவில் இனியாவது இறுதிப்பயணமாக பிணம் ஏதும் செல்லாமல் இருக்க மனிதநேயம் மிக்க மனிதர்கள் கருணை காட்டுவார்களா?.