விரத மகிமை

விரத மகிமை
சோமவார விரத மகிமை :-

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.

சோம வார விரத மகிமைகள்

தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள்.

தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். 

இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். 

இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

மலும் வசிஷ்ட முனிவர் இந்த விரதத்தை கடைப்பிடித்துத்தான் அருந்ததியை மனைவியாக அடைந்தார். திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி.

சிவபெருமானே கூறிய விரத நியதிகள்

சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள். என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார். ஒரு சமயம் இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார்.

அதற்கு சிவன், இந்த விரத காலத்தில் காலையில் விடிவதற்கு முன் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடிக்கவேண்டும். 

அன்றாடம் தவறாது சிவ பூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாகப் பாவித்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும். 

அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து முன் இரவில் ஒருவேளை உணவு மட்டும் அருந்தி சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். வீட்டில் விரிவாக பூஜை செய்ய வேண்டும். 

இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன், அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார்.
இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப் பெற்று வருகிறது. விரதத்தை ஆண்களும் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.

சோம வாரத்தில் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றால நாதரையும், குழல்வாய்மொழி அம்மையாரையும் தரிசனம் செய்வது சிறப்பு, சுசிந்திரத்தில் தாணுமாலய சுவாமியை வழிபடுவதும் நல்லது.

வைகுண்ட ஏகாதசி :-

"காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச் சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்று வித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். முரனை எரித்த மோகினிக்கு "ஏகாதசி' என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும்; அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண் டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளி னார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்ப தால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன.

சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதமிருப்பவர்களுக்கு விரும்பிய பேறுகள் கிட்டும்.

வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைப் பெறுவர்.

ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். 

ஆடி மாதத்து "யோகினி', "சயன' ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறை ஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும்.

புரட்டாசி மாத ஏகாதசிகள் "அஜா', "பரிவர்த்தினி' எனப்படுகின்றன. 

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என அழைக்கப்படுகின்றன. 

கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'.

மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது.

தை மாத ஏகாதசிகள் "சுபலா', "புத்ரதா' எனப்படுகின்றன. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றைச் செய்யாமல் அவர்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், புத்ரதா விரதம் அனுஷ்டித்தால், பித்ருசாபம் நீங்கி நலம் பெறுவர்.

மாசி மாத வளர்பிறை ஏகாதசியான "ஜெயா'வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர். தேய்பிறை ஏகாதசியான "ஷட்திலா' தினத்தில் விரதம் அனுஷ் டிப்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி நலம் அடைவர். பங்குனி மாத ஏகாதசிகள் "விஜயா', "விமலகி' எனப்படுகின்றன. இராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு.

தசமியிலும், துவாதசியிலும் ஒரு வேளை உணவு உண்டு, அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடித்து, அதன் பிறகு முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. இயலாதவர்கள் நிவேதனம் செய்த பழங்களை சிறிதளவு உண்ணலாம். பகலிலும் அன்று உறங்காமல் பரந்தாமனை பஜனை, நாமஸ்மரணை செய்தும், வழிபாட்டுப் பாடல்களைப் பாராயணம் செய்தும் வழிபட வேண்டும்.

அடுத்த நாள் துவாதசியன்று அடியார்களுக்கு உணவளித்து அதன் பின்னரே உண்ண வேண்டும்

அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.

ஏகாதசி. இதற்கு மிஞ்சின விரதம் வேறு இல்லை :-

ஏகாதசி. இதற்கு மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம். ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்... ஏகாதச்யாம பூரார்த்தம் கர்த்தவ்யம் போஜனத்வயம்... என்று ச்லோகம் ஒன்று உண்டு. அதாவது ஏகாதசியன்று போஜனத்வயம் என்றபடிக்கு இரண்டு வேளையும் சாப்பிடணும்... போஜன த்வயம் என்றா பொருள்... அப்படி இல்லை! ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும்... போ(ஓ) ஜன(மக்களே) த்வயம்(இரண்டு) த்ராத்ரௌ ஜாகரணம் குர்யாத் திவாஜ ஹரி 
கீர்த்தனம்.... இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதே இந்த இரண்டு செயல்கள்... போ ஜனா த்வயம் கர்த்தவ்யம் என்ற அர்த்தம் இந்த ச்லோகத்துக்கு!

இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அனுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். 

அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜ்யத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜ்யத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவித பக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் 
நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்.. 

அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான்.

ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு 
போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து... இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும். 

அப்போதுதான்.... துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்... வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த 
துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு... 

ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி, பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட்டாக அப்போது துர்வாசர் ... இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு. 

அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் ... ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்... அவரை விட்டுவிட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி 
போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது... என்றார்கள்.

அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப்போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்... 

என்ன செய்கிறாய்...? 

பாரணை...! 

என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்.... என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே 
இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார். 

அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்... என்று கர்ஜிக்க... துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்... சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோ சமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது. 

தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை இரண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக் கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்...

அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார்.

அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம் 
புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்... என்றார். 

வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். 

ஏகாதசி விரத மகிமை அப்பேர்ப்பட்டது.