பொதுவாக நவக்கிரகங்களுக்கு, ஆலயங்களில் சந்நிதி இருந்தாலும் நவக்கிரங்களுக்கென்று தனித்தனியே அமைந்துள்ள கோவில்களுக்குச் சென்று அந்தந்தக் கிரகங்களை வழிபடுவது தான் தனிச்சிறப்புடையது. இந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் நவக்கிரங்களுக்கும் தனித்தனியே அமைந்துள்ள கோவில்கள் அமைந்துள்ளன.
நவகிரகங்களுக்கு ஜாதகரீதியாக பரிகாரம் மற்றும் வழிபாடு செய்வதாக இருந்தால் குறிப்பிட்ட அந்த கோவிலுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும். கும்பகோணம் அல்லது மாயவரம் எனப்படும. மயிலாடதுறையை மையமாக வைத்தால் இந்த ஒன்பது கோவில்களுக்கும் சென்று வருவது எளிதாகும்.
வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்) மாயவரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூல தெய்வம் ஸ்ரீ வைத்தியனாத சுவாமி. இது செவ்வாய் கிரகத்துக்கு உரிய தலம். இதன் பழைய பெயர் புள்ளிருக்கு வேளூர். ஜடாயு இங்கே வீழ்ந்தாக வரலாறு உண்டு. இன்றும் ஜடாயு குண்டம் கோவிலில் உள்ளது. வேத காலத்தைச் சேர்ந்த மரம் ஒன்றும் இங்கே உள்ளது.
சூரியனார் கோவில் (சூரியன்) கஞ்சனூரை அடுத்த இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. சூரிய தேவன் உஷாராணியுடன் வீற்றிருக்கும் புகழ் பெற்ற தலம் இது. முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்னும் முனிவர் தனக்கு குஷ்ட நோய் வரவிருப்பதை உணர்ந்து, நன்மை தீமைகளை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது நவக்கிரகங்களே, என்பதால் நவக்கிரகங்களைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார்.தவத்திற்கு இரங்கி நவ கிரகங்களும் முனிவர் முன் தோன்ற முனிவர் தன் குறையைக் கூறி தொழு நோய் வராமல் காக்க வேண்டினார். விதியின் பயனை மாற்றும் வல்லமை தமக்கு இல்லை என்று நவக்கிரகங்கள் கூறவே கோபமுற்ற முனிவர் எனக்கு வரவிருக்கும் தொழு நோய் உங்களைப் பீடிக்கட்டும் என்று சாபமிட்டார். நவ கிரகங்கள் தொழு நோயால் பீடிக்கப்படவே பரமேஸ்வரனை நோக்கி வழிபட்டன. வானில் ஒரு அசரீரி தோன்றி நீங்கள் திருமங்கலக்குடி சென்று ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரரை நோக்கி தவம் இருங்கள். அருள் கிடைக்கும் என்று கூறியது. அதன் படியே நவக்கிரகங்கள் வெள்ளை எருக்கன் வனத்தில் தவம் இருக்க ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரர் அவர்களுக்குக் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி செய்ததோடு இங்கிருந்தே அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலியுங்கள் என்று வரம் அளித்ததார். இங்கு வரும் பக்தர்கள் முதலில் ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரரை முதலில் வழிபடுவது மரபு. இங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தனியே கோவில்கள் உள்ளன. குரு, சூரிய பகவானை வணங்குவதை இங்கே பார்க்கலாம்!
கஞ்சனூர் (சுக்கிரன்) மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பதையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமணம் மற்றும் பண வரவிற்க்கு சுக்கிரனின் அருள் மிகமுக்கியம், கஞ்சனூர் சுக்கிரனுக்குரிய தலம்.
திங்களூர் (சந்திரன்) சூரியனார் கோவிலிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றுக்கு 4 கிலோமீட்டர் முன்னதாக அமைந்திருக்கும் திருத்தலம் இது சந்திரனுக்குரிய தலம் இது. வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு இங்கே செல்வது நலம்.
ஆலங்குடி (குரு) கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியே ஆலங்குடி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் நீடாமங்களம் அருகில் அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் இருந்து அருள் பாலிக்கும் அற்புதக் கோவில் இது. குருப் பெயர்ச்சி சிறப்பாக இங்கே நடைபெறும்.
திருவெண்காடு (புதன்) மேலப் பெரும்பள்ளத்திற்க்கு அருகில் அமைந்துள்ள தலம். சீர்காழியிலிருந்து 15 கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது. புதனுக்கு உரியது நான்கு புறமும் ராஜ கோபுரங்களை உடையதும் பரப்பளவில் பெரிதானதுமான கோவில் இங்குள்ளது. மூன்று குளங்கள் கோவில் முன்பாக உள்ளன. புத்திக்கு நாயகனான புதனுக்குரிய இந்த தலத்தில் புதனுக்கு பயறு தானியத்தின் மீது விளக்கேற்றினால் புத்தி தெளிவடையும். கல்வி உயரும், நரம்புத்தளர்ச்சி முதலான வியாதிகள் தீரும்.அந்தந்தக் கோவில்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரித்தான பூஜை முறைகளைச் செய்து அருள் பெறலாம்.
திருநள்ளாறு (சனி) திரு நாகேஸ்வரத்திலிருந்து பேரளம், அம்பகரத்தூர் வழியே திரி நள்ளாறைச் சென்று அடையலாம். காரைக்காலிலிருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் உள்ளது. நிடத நாட்டு மன்னனான நளன் சனீஸ்வரனின் பார்வை பட்டதால் தன் நாட்டை இழந்து, மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்தான். கானகத்தில் கார்க்கோடகன் என்றபாம்பு தீண்ட தன் அழகிய உருவையும் இழந்து அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாக பணி புரியும் நிலையை அடைந்தார். பிறகு சனீஸ்வரனை மனம் உருகி வழிபட்டு சனீஸ்வரனின் அருளால் தன் நாட்டை மிண்டும் அடைந்தார். மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்தார், என்றாலும் எப்போதும் சித்த பிரமை பிடித்தது போல அவர் இருக்கவே, நாரத முனிவர் அவனிடம் தீர்த்த யாத்திரை செல்லுமாறு கூறினார். அதன் படியே பல புண்ணிய தலம் சென்று வழிபட்டு கடைசியில் தர்ப்பாரண்யம் என்ற தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள தர்ப்பாரண்யெஸ்வரர் என்ற ஈஸ்வரனை வணங்கியதும் சனி அவனை விட்டு முற்றிலுமாக நீங்கினார். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதற்க்கு நள தீர்த்தம் என்று பெயரிட்டு இறைவனுக்கு வைகாசி மாதம் புனர் பூச நட்சத்திர நாளில் விழா நடத்தி முக்தி பெற்றார். இந்த தலமே இன்று திருநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. திரு ஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் தனிச் சிறப்பு பெற்றது. நள்ளிரவு வரை இங்கு தீர்த்தமாடி தோஷ நிவர்த்தியை பக்தர்கள் பெறுகிறனர். ஈஸ்வரன் தனக்கு நிகரான பெருமையை இங்கு சனீஸ்வரனுக்கு அளித்திருக்கிறார். சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டு தினம். பகவானுக்கு உகந்த எள்ளு பொட்டலத்தைச் சமர்ப்பித்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வைத்தால் சனி பகவானின் அருள் கிடைக்கும். இங்கு சனிப் பெயர்ச்சி பெரிய திருவிழாவாக நடை பெறுகிறது.
திரு நாகேஸ்வரம் (ராகு) கும்பகோணத்திற்கு அருகில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. இந்த கோவிலில் ராகுவிற்கு பாலபிஷேகம் செய்து விட்டு மேலப் பெரும்பள்ளத்தில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்தால் தோஷங்களை விலகும். ராகு பகவானுக்கு ராகு கால வேளையில் அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தினமும் ராகு கால வேளைகளில் சிறப்பான அபிஷேகம் செய்கின்றனர். ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது சுவாமியின் மேல் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறும். அந்த பால் ராகுவின் மேனியில் நீல நிறமாக வழிந்து பாதத்தை அடைந்து தூய வெண்மை நிறமாக மாறி தரையில் ஓடுகிறது. நாக நாத சுவாமி கோவிலில் வெளி பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியர்களுடன் கோயில் கொண்டு ஏழுந்தருளியுள்ளார். சிறந்த சிவ பக்தரான ராகு, காலஹஸ்தி, திருக்களர், ரமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் இந்த தலத்தில் மட்டுமே தன் இரு தேவியருடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போதுவெல்லமும், அரிசியும் கலந்து காப்பரிசி நிவேதனம் செய்து விட்டு அதை சன்னிதியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்று விடுவார்கள். மறு நாள் வைத்து பார்த்தால் அந்த அரிசி இருக்காது. அதை நாகம் வந்து தின்றுவிடும் என்பர். இந்த தலத்திற்கு உரிய விருட்சம் செண்பக மரம். இங்கே 12 தீர்த்தங்கள் உள்ளன.
மேலப்பெரும்பள்ளம் (கேது) காரைக்கால் தரங்கம்பாடி வழியே பூம்புகார் செல்லும் வழியில் மேலையூருக்கு அருகில் அமைந்துள்ள கிராமம். மேலப்பெரும்பள்ளம் இது கேதுவிற்கு உரிய தலம்.